Followers

Saturday, 11 February 2012

இயற்கை தரும் இளமை வரம்! மணப்பெண் போல் மாற்றி வைக்கும் மகிழம்பூ!

 



இயற்கை தரும் இளமை வரம்!
மணப்பெண் போல் மாற்றி வைக்கும் மகிழம்பூ!

மகிழம்பூ... பேரைக் கேட்டாலே மனம் மலரும். மகிழ்ச்சியை மடை திறந்த வெள்ளமாகத் தருவதில் மகிழம்பூவுக்கு ஈடு இணையே இல்லை. வாடிப் போனாலும், வற்றாத வாசனையை வாரி வழங்கும் வள்ளலான மகிழம்பூவை தலையில் சூடும் போது கிடைக்கும் அழகைவிட, மூலிகையாக பயன்படுத்தினால் கிடைக்கும் அழகு... அளவில்லாதது. இளம்பெண்களின் சருமப் பிரச்னைகளை சடுதியில் போக்கிடும் அற்புத வித்தையும் இந்த மலரிடம் ஒளிந்து கிடக்கிறது. அதிலிருந்து சிலவற்றை நாம் அள்ளிக் கொள்வோமா...?

ஒரு கப் ஃப்ரெஷ் மகிழம்பூவுடன், அரை கப் குளிர்ந்த ரோஸ் வாட்டரை (ரோஜா பூக்களைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்தும் சேர்க்கலாம்) சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் 'பேக்' போடுங்கள். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால் முகம் மிருதுவாகி, பளபளக்கும்.


மகிழம்பூ பவுடர் (பூக்களை காய வைத்து அரைத்தது) - ஒரு டீஸ்பூன், பால் பவுடர் ஒரு டீஸ்பூன் இரண்டையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். அதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்து வர, அன்று பூத்த மலராக முகம் பளீரென்று இருக்கும்.

மணப்பெண்ணுக்கு ஏற்ற அழகு சிகிச்சைகள்...



உடல்: 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 50 கிராம் ஃப்ரெஷ் மகிழம்பூவை ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். பிறகு, நான்கு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து வடிகட்டுங்கள். இந்தத் தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து ஊற வைத்து குளியுங்கள். அரோமா தெரபி செய்து கொண்டதுபோல் உடல் குளிர்ச்சியுடன் இருக்கும். வாசனையோடு கூடிய பளபளப்பு கிடைக்கும். ஃப்ரெஷ்ஷாக உணர வைக்கும்.

தலை: கால் கிலோ நல்லெண்ணெயுடன் 50 கிராம் ஃப்ரெஷ் மகிழம்பூவை சேர்த்துக் காய்ச்சி இறக்குங்கள். இதனுடன், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை தலா 25 கிராம் கலந்து கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து ஊற வைத்துக் குளியுங்கள். கண்டிஷனர் போட்டதுபோல் கூந்தல் மென்மையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

ஒரு கப் ஃப்ரெஷ் மகிழம்பூவை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். மேலே உடல் மற்றும் தலைக்கு குறிப்பிட்டுள்ள தைலங்களை தேய்த்துக் குளித்தபிறகு, மகிழம்பூ போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் உடல் மற்றும் தலையை அலசுங்கள். புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் குடிகொள்வதோடு அற்புதமான அழகும் சேர்ந்துகொள்ளும்.

தோல்: ஃப்ரெஷ் மகிழம்பூவை ஊற வைத்து அரைத்த விழுதுடன், அதே அளவு பயத்தம்பருப்பு மாவைக் கலந்து தினமும் உடம்பில் தேய்த்துக் குளியுங்கள். திட்டுக்கள், கருமை, வியர்வை நாற்றம் அத்தனையும் காணாமல் போய் தோல் பளபளவென மின்னும்.

உலர்ந்த மகிழம்பூ, மரிக்கொழுந்து, பூலான்கிழங்கு, கடலைப்பருப்பு ஆகியவற்றை தலா 100 கிராம் கலந்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போதெல்லாம் இந்தப் பவுடரை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்துக் குளியுங்கள். மாசு, மரு இல்லாத வாசனையுடன் கூடிய அழகு ஜொலிக்கும்.

தோலில் வறட்சி தலையில் செதில் போன்ற தொல்லைகள் வராமல் தடுக்கவும் மகிழம்பூ உதவுகிறது.

100 கிராம் வெந்தயத்தூளுடன், மகிழம்பூ பவுடர்(பூக்களை காய வைத்து அரைத்தது), புங்கங்காய்தூள், கடலை மாவு இவை தலா 50 கிராம் சேர்த்து கலப்பு பவுடர் தயாரித்துக் கொள்ளுங்கள். தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது இந்தப் பவுடரில் சிறிது எடுத்து உச்சி முதல் பாதம் வரை தேய்த்து அலசுங்கள். செதில் பொடுகு, தொல்லை நீங்கி கூந்தல் நல்ல கண்டிஷனில் இருக்கும். தோலும் பளபளக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவுக்குப் பதிலாக பயத்தம்பருப்பு மாவைக் கலந்து கொள்ளலாம்.

மேலே சொல்லப்பட்டுள்ள கலப்பு பவுடருடன், வெள்ளரி விதை பவுடர், கஸ்தூரி மஞ்சள்தூள் இரண்டும் தலா 50 கிராம் கலந்து குளித்தால் சருமம் நல்ல நிறத்தோடு மின்னும்.

மனக்கலக்கத்தை போக்கும் மகிழம்பூ!

டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:

மகிழம்பூவைத் தலையில் சூடிக் கொள்வதால் உடல் சூடு தணிந்து மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.

இந்தப் பூவை தினமும் முகர்வதால் ஒற்றைத் தலைவலி சரியாகும்.

வேலைப் பளு, குடும்பப் பிரச்னைகளால் மன நிம்மதியில்லாமல் தவிப்பவர்களின் மூளை எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருக்கும். அப்படிப்பட்டவர்கள், மகிழம்பூவில் தயாரிக்கப்படும் தைலத்தை தலையில் தடவி வந்தால்... மூளை குளிர்ச்சியாகி மன நிம்மதி கிடைப்பதோடு, தெளிவும் கூடும்.

மகிழம்பூவில் பூச்சிகள் இருக்கும். இந்தப் பூவை நன்றாகச் சுத்தப்படுத்தி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடியுங்கள். ஒரு மண்டலம் குடித்து வந்தால் உடலில் சதை பிடிக்கும்.

ஒரு கைப்பிடி மகிழம்பூவை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆறியதும் காலை மாலை இருவேளையும் குடித்து வர, உடல் உஷ்ணம் குறையும்.

மகிழம்பூவை சுத்தப்படுத்தி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வையுங்கள். தண்ணீர் பாதியாகச் சுண்டியதும் அதில் பாலை கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வர ஆண்மை குறைபாடு நீங்கும்.

உலர்ந்த மகிழம்பூ, கருவேலம்பட்டை, காச்சி கட்டி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இவற்றைத் தண்ணீரில் போட்டுக் கஷாயாமாக செய்து கொள்ளுங்கள். ஆறாத ரணமாகிப் போன புண், காயங்களின் மீது இந்த கஷாயத்தை விட்டு, சுத்தம் செய்து பிறகு மருந்து பூசுங்கள். விரைவில் குணமாகும்.

No comments:

Post a Comment

Popular Posts