Followers

Saturday, 24 December 2011

யோகா முத்திரைகள்

 
 
 


முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த
"பஞ்ச மஹாபூதங்கள்" ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் "ஈதர்" என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன
1. கட்டைவிரல் – அக்னி
2. ஆள்காட்டி விரல் – வாயு
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – பூமி
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால்
உடல் நலம் கூடும்.
முத்திரைகளை பயிலும் முறை
1. "பத்மாசனம்" போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு "சூன்ய முத்திரை". இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.
முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி 'பிராண முத்திரையுடன் செய்தால்' தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.
நமது பழங்கால முனிவர்கள் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.

No comments:

Post a Comment

Popular Posts