Followers

Sunday, 12 February 2012

கூந்தல் உதிர்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதைத் தடுக்கவும் பல வழிகள் உண்டு...

 





கூந்தல் உதிர்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதைத் தடுக்கவும் பல வழிகள் உண்டு...



தலைமுடியானது திடீரென ஏதோ ஒரு காரணத்தால் கருமை குறைந்து போகக்கூடும். இளநரைகூட எட்டிப் பார்க்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்குக் கைகொடுக்கிறது வெட்டிவேர் தைலம். இது முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, கருகருவெனவும் பராமரித்து, உங்கள் இளமையைத் துள்ள வைக்கும்.

வெட்டிவேர் (சிறுசிறு துண்டுகளாக) - 1 கப், ஜாதிக்காய் - 10... இவை இரண்டையும் முந்தைய நாள் இரவே காய்ச்சிய பசும்பாலில் ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் விழுதாக அரைத்து, இரண்டு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு, நன்றாக ஓசை வரும்வரை காய்ச்சி இறக்கினால் வெட்டிவேர் தைலம் தயார்.

பிறகு, அரை மூடி தேங்காயைத் துருவி, அரைத்து அடுப்பில் வைத்து எண்ணெய் பிரியும் வரை காய்ச்சி வடிகட்டி, இதை வெட்டிவேர் தைலத்துடன் சேருங்கள். இந்தத் தைலத்தை தினமும் தலைக்குத் தேய்த்துக் கொள்ளலாம். தலையில் வியர்வையின் காரணமாக சுரக்கும் அதீத எண்ணெய் உறிஞ்சப்படுவதற்கு வெட்டிவேர் துணை புரியும். முடி வளர்ச்சியை ஜாதிக்காய் பார்த்துக் கொள்ளும். முடியை சீக்கிரமாக வளர வைக்கும் வேலையை பசும்பால் எடுத்துக் கொள்ளும். கருகருவென கூந்தலின் நிறத்தைப் பராமரிப்பது... தேங்காயின் வேலை.


'மூக்குனு இருந்தா... சளி இருக்கத்தான் செய்யும்' என்பார்கள். அதுபோல கூந்தல் என்றாலே... உதிராமல் இருப்பது என்பது அபூர்வம். கூந்தல் உதிர்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதேசமயம், அதைத் தடுத்து நிறுத்தவும் பல வழிகள் உண்டு என்பதுதான் சந்தோஷமான சமாசாரம். அதில் ஒன்று... கீரை தைலம்!

அரைக்கீரை, பொன்னாங்கன்னி கீரை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, வெந்தயக்கீரை இந்த ஐந்து இலைகளையும் தலா ஒரு கப் எடுத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள். இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒரு நாள் வைத்திருந்தால்... தெளிந்துவிடும். தெளிந்த எண்ணெயை தனியாகப் பிரித்து சேமியுங்கள். அதை வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால்... கூந்தல் உதிர்வது நின்றுவிடும். அது எந்தக் காரணத்தினால் உதிர்ந்தாலும் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையை இந்தக் கீரைத் தைலம் பார்த்துக்கொள்ளும்.

சரியாகச் சாப்பிடாமல் ரத்த சோகை யால் முடிகொட்டுகிறது என்றால்... அதை அரைக்கீரை நிவர்த்தி செய்துவிடும். இந்தத் தைலத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் கறிவேப்பிலை... இளநரைக்கு தடா போடும். உடல் உஷ்ணத்தால் முடி கொட்டிக் கொண்டி ருந்தால் அதை தடுத்து நிறுத்தும் வேலையை பொன்னாங்கன்னி பார்த்துக் கொள்ளும். பொடுகு அரிப்பினால் முடி வளர்வது தடைபட்டால், வெந்தயக்கீரை அதை நிவர்த்தி செய்வதோடு... மிருதுவாகவும் மாற்றி வைக்கும். உணவுப் பழக்கத்தாலும் முடி உதிர்வதுண்டு... இதன் காரணமாக முடி உதிராமல்... கட்டுக்குள் கொண்டு வர கற்பூரவல்லி உதவும்.


முடியைப் பிளக்கும் ஏ.சி... சேர்த்து வைக்கும் கடுக்காய் !


நன்றாக முடி வளர ஆரம்பிக்கும் காலம் என்பதே டீன்-ஏஜ் பருவத்தில்தான். அதேபோல... அதிகமாக முடி உதிர ஆரம்பிப்பதும் இந்தப் பருவத்தில்தான். சத்தான உணவு, சரியான கூந்தல் பராமரிப்பு என்று அக்கறையோடு இல்லாவிட்டால் ஆறடி கூந்தல்கூட... அரையடிக்கும் குறைவாக வந்து நின்றுவிடும்.

கறிவேப்பிலையை துவையல், பொடி என்று உணவில் சேர்ப்பதன் மூலம், இரும்புச் சத்து உடலில் சேர்ந்து, முடியை வலுவாக்கும். 'எந்த உணவில் கறிவேப்பிலை இருந்தாலும், தூக்கி வீசாமல் சாப்பிடுவேன்' என்று முதலில் ஒரு சபதம் போடுங்கள்!

வாரத்துக்கு ஒருமுறை, ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும். முடி செம்பட்டையாக இருந்தாலும் கருமையாக்கி கண்சிமிட்ட வைக்கும்.

முடி உதிர்வதை உடனடியாக கவனிக்காமல் விட்டால்... கடைசியில் தினம் தினம் 'திருப்பதி' போனது போல ஆகிவிடும் தலை! நல்ல முற்றிய தேங்காயின் துருவல் ஒரு கப் எடுத்து, அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சுங்கள். எண்ணெய் தனியாக பிரிந்து வரும். இதுதான் கலப்படமில்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய். இதைத் தினமும் தலைக்கு தேய்த்து வந் தால், முடி உதிர்வது நின்று, வளர்ச்சியும் துரிதப்படும்.

இளவயதில் வரும் முடி கொட்டுதல், வழுக்கை, நரை போன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்க... 100 மில்லி தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் ஒரு கப் மருதாணி இலையைப் போட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். 2 நெல்லிக்காய், 2 பூந்திக் கொட்டையை அரைத்து, மருதாணி தண்ணீரில் கலந்து, வாரம் ஒரு முறை தலைக்கு பேக்' போட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்து ஷாம்பூ (அ) சீயக்காயினால் அலசுங்கள்.

வாரத்துக்கு இரண்டு முறை சின்ன வெங்காயம் இரண்டுடன், தேங்காய் துண்டு இரண்டு சேர்த்து அரைத்து வழுக்¬கயின் மீது பூசுங்கள். பிறகு, கடலை மாவைத் தேய்த்து அலசினால், மீண்டும் முடி முளைக்க ஆரம்பிக்கும்.

ஸ்டெரெயிட்டனிங்' (முடியை நேராக்குதல்) செய்வதால், முடியானது ஆறே மாதத்தில் சுருங்கி, வலுவிழந்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதைத் தடுக்க... கொதிக்கும் டீ டிகாஷனில் டர்க்கி டவலை நனைத்துப் பிழிந்து, தலை முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம். ஏ.சி-யிலேயே இருப்பவர்களுக்கு கூந்தல் வறட்சி, நுனி முடி பிளவு போன்றவை ஏற்படும். ஓமம், சீரகம், உடைத்த கடுக்காய் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து விழுதாக அரைத்து அதனுடன் கடலைமாவு, பயத்த மாவு கலந்து தலைக்கு தேய்த்து அலசும் போது, இந்தப் பிரச்னைகள் தீரும்.


பளபள கூந்தலுக்கு டீ போடுங்க!

அழகே... ஆரோக்கியமே...

"நாற்பது வயசாயிடுச்சு... கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துக்கோ..!" என்று எச்சரிக்கை மணி அடிப்பதற்காகவே அந்த வயதில் பலவித மாற்றங்களும் நம்முடைய உடலை ஆக்கிரமிக்கும். அதில் ஒன்று... அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல். தலையில் காணப்படும் வறட்சிதான் இதற்கு முக்கிய காரணமென்றாலும், அதைக் கொண்டுவந்து சேர்க்கும் மூலக்காரணிகள் நிறைய இருக்கின்றன. முக்கியமாக, மெனோபாஸ் என்பது இந்த வயதில் ஆரம்பமாவதால், டென்ஷன், உடல் சோர்வு, மன உளைச்சல் ஆகியவை ஏற்பட்டு, அதன் காரணமாகவும் தலைமுடி உதிரும்.

'நாற்பது வயதாகிவிட்டது. இனிமேல் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்' என்று ஆரோக்கியத்தில் அதீத அக்கறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். கொழுப்புச் சத்து நிறைந்த பால், தயிர் போன்றவற்றைத் தவிர்த்துவிடுவார்கள். இதனால், தோல் பாகங்களில் எண்ணெய்ப் பசை குறைந்து, ஒட்டுமொத்த உடம்பும் வறண்ட பாலைவனமாகிவிடும். இதுவும் முடி உதிரக் காரணமாக அமைந்துவிடும். தலையில் வகிடு எடுக்கும் பகுதி அகலமாகி, சொட்டை விழுந்ததுபோல் தெரியும். கோண வகிடு எடுத்தாலும் ஒரு பக்கமாக வழுக்கை விழும். அந்த இடத்தில் முடி வளர்வதற்கான அறிகுறியே இல்லாமல் போய்விடும். முடிகளின் நுனியில் பிளவு ஏற்பட்டு, வளர்ச்சியும் பாதிக்கப்படக்கூடும்.


இப்படிப்பட்ட சிக்கல்களில் இருந்து தப்பிக்க... அடிக்கடி வெறும் தலைக்கு குளிப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். அரை டீஸ்பூன் விளக்கெண்ணெயை சிறு கிண்ணத்தில் ஊற்றி, அதை அப்படியே கொதிக்கும் நீரின் மீது வைத்து எடுத்து, சூடு பறக்க தலையில் தேய்க்க வேண்டும். பிறகு, சுத்தமான சீப்பு கொண்டு வார வேண்டும். தினமும் இப்படிச் செய்தால், வகிடு பகுதியில் அகலம் குறைந்து, நெருக்கமாக முடி வளர ஆரம்பிக்கும்.

முடியானது அதிகம் பிளவுபட்டிருந்தால், 100 மில்லி தேங்காய் எண்ணெயில் சிறிது ஓமத்தைப் போட்டுக் காய்ச்சி, தலையில் நன்றாகத் தேய்த்து, சீப்பு கொண்டு வாரிக் கொள்ளலாம். ஓமம் சேர்ப்பது கூந்தலைப் பாதுகாப்பதோடு, சளி பிடிப்பதையும் தடுக்கும்.

சிலருக்கு படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போதெல்லாம் கொத்து கொத்தாக தலையணையில் முடிகள் விழுந்திருக்கும். தலையில் சீப்பை வைத்தாலோ... வேரோடு உதிரும். இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், தினமும் இரவு தூங்கப் போவதற்குமுன் ஆலிவ் எண்ணெயை சிறிது எடுத்து தலையில் நன்றாக மசாஜ் செய்து சீப்பு கொண்டு வாரி, நுனி வரை பின்னல் போட்டுக்கொள்ள வேண்டும். இதனால், முடி உதிர்வது குறையும்.

வறட்சி காரணமாக முடியின் பளபளப்பும் குறைந்துவிடும். இதற்கு, வெந்நீரில் 3 டீஸ்பூன் வெந்தயத்தூள், 3 டீஸ்பூன் டீத்தூள், ஒரு டீஸ்பூன் தயிர்... இவை மூன்றையும் கலந்து தலைக்கு குளித்து வந்தால் Ôபோன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடுÕ என்கிற கதையாக மறுபடியும் உங்களின் கூந்தல் பளபளக்கும்!


- மிளிரும்...

No comments:

Post a Comment

Popular Posts