Followers

Tuesday, 18 October 2011

கல்லீரலே... இனி கலங்காதே!

 
 
உடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து கொடுப்பதுடன், தேவையற்ற பொருட்களை வெளியேற்றி உடம்பைப் பாதுகாக்கும் தொழிற்சாலையாகவும் செயலாற்றுகிறது. அத்தனை முக்கியத்துவம் நிறைந்த கல்லீரலில் பரம்பரை ரீதியாக ஏற்படும் பிரச்னைகளால் உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு. இப்போது அதனைத் தடுக்கப் புதிய அறுவை சிகிச்சையான செல் டிரான்ஸ்பிளான்ட் அறிமுகமாகி விட்டது.
இதுகுறித்து, சென்னை குளோபல் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நரேஷ் பி.சண்முகம் நம்மிடம் பேசினார். ''நமது உணவுகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்ற நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. நாம் உட்கொள்ளும் உணவானது செரிக்கப்பட்டு, ஊட்டச் சத்தாக ரத்தத்தில் கலக்கின்றன. ரத்தத்தில் கலந்த இந்த ஊட்டச் சத்துக்கள் கல்லீரலுக்கு கொண்டுசெல்லப்படும். பின்பு அவை சாதாரண சர்க்கரை, அமினோ அமிலம் மற்றும் கொழுப்பாக மாற்றப்படும். இதன் மூலம் வெப்ப ஆற்றல் உருவாக்கப்படுகிறது. இப்படி உடைக்கப்பட்ட சாதாரண சர்க்கரை, அமினோ அமிலம், கொழுப்பு போன்றவை உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குத் தேவையான காம்ப்ளக்ஸ் சர்க்கரை, புரதம் மற்றும் கொழுப்பாக மாற்றப்படும். இப்படி இவை மாற்றப்படுவதற்கு என்ஸைம்கள் தேவைப்படுகின்றன. ஏதாவது ஒரு என்ஸைம் குறைந்தால்கூட ஊட்டச்சத்தை உடைக்கும் பணி தடைபட்டு, மெட்டபாலிக் எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் பிரச்னை ஏற்பட்டுவிடும். இதை மெட்டபாலிக் டிஸ்ஆர்டர் என்று கூறுவோம்.
உணவில் உள்ள சத்துக்களை உடைத்து ஊட்டச் சத்துகளாக மாற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்ஸைம்கள் நம் உடலில் இருக்கின்றன. ஒரு என்ஸைம் குறைந்தாலும் பிரச்னைதான். அதனால் நூற்றுக்கணக்கான மெட்டபாலிக் டிஸ்ஆர்டர் பரவலாகக் காணப்படுகின்றன. அதில் ஒரு சில நோய்கள் மட்டும் மிக அரிதாக இருக்கும். உதாரணமாக புரதம் உடைக்கப்படும்போது, அது அமோனியாவை உற்பத்தி செய்யும். அமோனியா என்பது மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அது மூளையைப் பாதிக்கக்கூடியது. எனவே, கல்லீரல் அந்த அமோனியாவை யூரியாவாக மாற்றி சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது. அமோனியாவை யூரியாவாக மாற்றுவதை யூரியா சைக்கிள் என்று கூறுவோம். ஐந்து கட்டங்களாக இந்தப் பணி நடைபெறும். இதற்கு ஐந்து என்ஸைம்கள் தேவைப்படுகின்றன. இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் என்ஸைம் இல்லாமல் போய்விட்டால், இந்தப் பணி தடைபட்டு அமோனியா உடலில் தங்கிவிடும். இது மூளையைத் தாக்கி கடைசியில் உயிரிழப்பில் கொண்டுபோய்விடும்.
அதிக அளவில் பரம்பரை ரீதியாக குழந்தைக்கு இந்த நோய் கடத்தப்படுகிறது. பிறந்தவுடன் இந்தக் குறைபாடு தெரியாது. அவர்கள் குறிப்பிட்ட ஏதாவது ஓர் உணவை உட்கொள்ளும்போதுதான், பிரச்னை இருப்பது தெரிய வரும். உதாரணத்துக்கு ஹெரிடிட்டி ஃப்ராக்டோஸ் இன்டாலரன்ஸ் என்ற ஒரு வியாதி உள்ளது. சில குறிப்பிட்ட பழங்களை உண்ணும்போது அதில் உள்ள சர்க்கரையை ஜீரணிக்க முடியாமல் போய்விடும். அதனால், வயிற்றுப் போக்கு அல்லது கல்லீரல் செயலிழப்பில் கொண்டு போய்விடும். குழந்தைக்கு காய்கறி அல்லது பழங்களைப் புகட்ட ஆரம்பிக்கும்போதுதான் இந்தப் பிரச்னையே பெற்றோருக்குத் தெரிய வரும். கல்லீரலை மாற்றினால்தான் இவர்களால் உயிர் வாழ முடியும். சிலருக்கு ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் கிருமித் தொற்று காரணமாகவும் கல்லீரல் தோல்விப் பிரச்னை வரலாம்.
சிறுநீரகப் பிரச்னைக்கு டயாலிஸிஸ் செய்யப்படு வதுபோல, இவ ர்களின் கல்லீரலில் இருந்து குறிப்பிட்ட நஞ்சை அகற்றும் டயாலிஸிஸ் முறை வந்தது. ஆனால், அந்த சிகிச்சையால் எல்லாவிதமான நஞ்சையும் அகற்ற முடியவில்லை.மேலு ம், இதற்கான சிகிச்சைக் கட்டணமும் மிக அதிகம்.
இந்த நிலையில்தான் ஆக்ஸிலரி கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வந்துள்ளது. இதில், தானமாகப் பெறப்படும் கல்லீரலை, ஏற்கெனவே உள்ள கல்லீரலுடன் சேர்த்துப் பொருத்துவோம். இதனால் நோயாளியின் கல்லீரல் குறிப்பிட்ட பிரச்னையை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும். கூடுதலாகப் பொருத்தப்பட்ட கல்லீரல், அந்தக் குறிப்பிட்ட பிரச்னையை மட்டும் கையாளும். இதனால் நோயாளி தன் வாழ் நாள் இறுதி வரை இது தொடர்பான எந்த பிரச்னையும் இன்றி வாழ முடியும். இந்த அறுவை சிகிச்சை இந்தியாவில் இங்கு மட்டுமே செய்யப்படுகின்றது.
இந்த சிகிச்சையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு லிவர் செல் டிரான்ஸ்பிளான்ட் என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளது. தானமாகப் பெறப்படும் கல்லீரலில் இருந்து குறிப்பிட்ட திசுவை மட்டும் தனியே பிரித்து எடுத்து, பதப்படுத்திப் பாதுகாத்துவைக்கப்படும். தேவைப்படும்போது, கல்லீரலுக்குச் செல்லும் ரத்தத்தில் அந்த கல்லீரல் திசுவைச் செலுத்துவோம். அது நோயாளியின் கல்லீரலில் சென்று சேர்ந்து, செயல்பட ஆரம்பிக்கும். லண்டன் கிங்ஸ் காலேஜில் பணியாற்றும்போது, இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினோம். சென்னையில் இதுபோன்று சிகிச்சை மேற்கொள்வதற்கான ஆய்வகம் உள்ளிட்டவை நிறுவும் பணியில் ஈடுபட்டுவருகிறோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மெட்டபாலிக் டிஸார்டருக்கான சிகிச்சை முறை என்பது ஓப்பன் சர்ஜரி முறையில் இருந்து மாறி சிறு துளை திசு செலுத்தும் முறைக்கு மாறிவிடும்!'' என்றார் நம்பிக்கையாக.
மருத்துவப் புரட்சிதான்!
thanks:http://www.thedipaar.com/news/news.php?id=35486
 

No comments:

Post a Comment

Popular Posts