Followers

Sunday, 4 March 2012

நாட்டு வைத்தியம்

 

நாட்டு வைத்தியம்

குறிப்பு: நாஞ்சொல்லி-யிருக்கற பொருளுங்கள்ல பலதும் உங்க வீட்டுலயே இருக்-கும். இல்லாட்டி, நாட்டு-மருந்து கடையில கிடைக்கும்.

முகப்பருவை விரட்டுது கடலை மாவு!

நோய்ங்கறது... யாருக்கு வேணும்னாலும் வரலாம். ஆனா, 'நமக்குப் போய் இப்படி வருதே'னு கஷ்டப்பட்டுக்கிட்டு நிக்கிறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. அதுலயும் இந்த வயசுப் புள்ளைக இருக்குதே... நோய் வந்தா பெரும்பாலும் வெளியில சொல்ல வெக்கப்பட்டுக் கிட்டு, மருந்து எடுத்துக்கிடாம அப்பிடியே விட்டுருவாங்க. காலப்போக்குல அது பெரிய பிரச்னைகளை கொண்டு வந்து சேர்த்துடும். உங்க நோய் நொடியைப் பத்தி யாருகிட்டயும் நீங்க கலக்க வேணாம். இந்த பாட்டி சொல்ற வைத்தியத்தை சத்தமில்லாம செஞ்சு பாருங்க, நோய் பூரணமா குணமாயிரும்.

வெள்ளைப்படுதல் குணமாக...

சின்ன வயசுலயே சில பிள்ளைகளுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாகி பாடாபடுத்தும். படிகாரம்னு ஒண்ணு இருக்குதுல்ல... அதை வாங்கி, மண்சட்டியில போட்டு நல்லா பொரிக்கணும். மாசிக்காயை தூளாக்கி, படிகாரம் எவ்வளவு இருக்கோ... அதே அளவுக்கு எடுத்துக்கிட்டு ரெண்டையும் கலந்துக்கிடணும். அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து, வெண்ணெய் விட்டு கொழச்சி, காலைல ஒரு தடவை, சாயங்காலம் ஒரு தடவைனு சாப்பிடணும். 10 நாள்லயே குணம் கிடைக்கும். ஆனாலும், ஒரு மண்டலம் வரைக்கும் சாப்பிட்டு முடிக்கறது நல்லது.

ரத்தசோகை சரியாக...

வயசுப் புள்ளைங்க ஒழுங்கா சாப்பிடாம, 'விதி'யேனு கெடக்குறதுதான் இப்பல்லாம் ஃபேஷனுனு பேசிக்கறாங்க. ஆனா, இதுவே காலப்போக்குல ரத்தசோகை வர்றதுக்கு காரணமாயிடும். அப்படிப்பட்டவங்களுக்கு கீழாநெல்லிச் சமூலத்தை (வேர் முதல் பூ வரையிலான முழுச்செடி) அரைச்சி, ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து பால்ல கலந்து குடிச்சிட்டு வந்தா 10 நாள்ல ரத்தசோகை குணமாகும். தேவைனா தொடர்ந்து சாப்பிடலாம்.

மார்பு பகுதியில் வரும் புண் ஆற...

மார்புல சில பொண்ணுகளுக்கு புண் வந்து பாடாபடுத்தும். அதுக்கு கைவசம் மருந்து இருக்கு. காசுக்கட்டி 5 கிராம் அளவு எடுத்து, சுத்தமான தண்ணியில கரைச்சி, புண் வந்த இடத்துல தடவிட்டு வந்தா ரெண்டு, மூணு நாள்ல ஆறிரும். நல்லா குணமாகுற வரைக்கும் மருந்து போடலாம், தப்பில்ல.

முக வறட்சி விலக..

குங்குமப்பூ- அரை கிராம், சந்தன பவுடர்- 10 கிராம், மஞ்சள்தூள்- 5 கிராம், நெல்லிக்காய்கந்தகம் -1 கிராம்... இதெல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து பவுடராக்கிடணும். அதுல கொஞ்சம் பன்னீர் விட்டு அரைச்சி, 15 கிராம் வெண்ணெயில அதை குழைச்சி, கண்ணாடி கோப்பையில பத்திரப்படுத்தி வச்சிக்கிடணும். அதுல ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து ராத்திரி, ராத்திரி முகத்துல தேய்ச்சிட்டு வந்தீங்கனா... அழுக்கு, வறட்சியெல்லாம் பஞ்சா பறந்து போய், முகம் பளபளக்கும். தேவைப்படுறப்பயெல்லாம் இதைச் செய்யலாம்.

முகப்பரு விலக...

கடலை மாவை விளக்கெண்ணெயில கலந்து முகப்பருவுல பூசி ஒரு மணி நேரம், இல்லைனா ரெண்டு மணி நேரம் கழிச்சி குளிச்சிட்டு வந்தீங்கனா... பரு மாயமா மறஞ்சிரும்.





தான் தாயாகும்போதுகூட பெண்கள் ரொம்ப பயப்படுறதில்ல. ஆனா, தன் மக உண்டாகி, தாய் வேறா பிள்ளை வேறா பிரியுற வரைக்கும் பரிதவிச்சுப் போயிடுறா ஒவ்வொரு பெண்ணும்.

அதுலயும் இன்னிக்கு இருக்குற அம்மாக்கள் பலருக்கும் மக சூட்டு வலியில துடிக்கிறாளா.. பிரசவ வலியானு தெரியுறதில்ல. வலியில துடிக்கிற பிள்ளைக்கு என்ன செய்யணும்னும் தெரியுறதில்ல. அதைத்தான் இங்க சொல்லித் தந்திருக்கேன்.. கவனமா கேட்டுக்குங்க! இந்த வைத்தியத்தை செஞ்சு வலி நின்னுட்டா அது பிரசவ வலி கிடையாது. வலி நிக்கலைன்னா, பிள்ளைய டாக்டர்கிட்ட கூப்பிட்டுட்டுப் போய்டலாம்.

அடிவயிற்று வலி, நீர்க்கட்டு விலக..

புள்ளைத்தாச்சிப் பொண்ணுங்க சிலருக்கு ஏழாம் மாசம் நெருங்குறப்பவே சில உபாதைகளும் வந்துரும். அதுல முக்கியமானது சூலைவலிங்கிற அடிவயித்து வலி.

ஒரு பாத்திரத்துல ஒரு கைப்பிடி அளவுக்குப் பெருந்துத்தி இலை போட்டு, அதுகூட ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம், சீரகம் ஒரு ஸ்பூன், பசும்பால் கால் லிட்டர், தண்ணி அரை லிட்டர் சேர்த்து, மூடி, அடுப்புல வச்சி கொதிக்க விடணும். நல்லா ஆவி வந்ததும் அடுப்பை அணைச்சிட்டு இறக்கிடணும். பாத்திரம் சூடு தாங்குற அளவுக்கு வந்ததும், அப்படியே அடிவயித்துக்கு கீழ வச்சி ஆவி பிடிச்சா, அடிவயித்து வலி போயிரும்.

இதுக்கு இன்னொரு வைத்தியமும் இருக்கு. ஒரு டேபிள்ஸ்பூன் ஓமத்தோட 5 வெத்திலை, 3 பூண்டு பல்லு எடுத்துக்கணும்.

வெறும் கடாயில ஓமத்தைப் போட்டு வறுத்துக்கணும். அது நல்லா பொரிஞ்சு வெடிச்சதும் வெத்தலையை பிய்ச்சுப் போடணும். தோலு உரிக்காம பூண்டை நசுக்கிப் போட்டு 5 நிமிஷம் வதக்கணும். இதுல ஒண்ணரை டம்ளர் தண்ணிய விட்டு அரை டம்ளரா வத்துற வரைக்கும் காய்ச்சணும். இதுகூட 50 கிராம் பனைவெல்லம்.. இல்லைன்னா, நெல்லிக்காய் அளவு பசுவெண்ணெய்.. சேர்த்து, கலக்கிக் குடிக்கணும். சுரீர்னு வலிச்ச சூலை வலி நின்னுரும். நீர்க்கட்டு வராமலும் பாதுகாக்கும் இந்த பானம்.

குழம்பு வடகத்தை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து கடாயில போட்டுப் பொரிச்சிக்கணும். இதுல ஒரு டம்ளர் தண்ணிய விட்டு அரை டம்ளரா காய்ச்சி, சூடு ஆறினதும் குடிக்கணும். இப்படி குடிச்சா நீர்க்கட்டு விலகி, உடல் வீக்கமும் உருண்டோடிரும்.

அரிசி வேக வச்ச தண்ணிய (கூழா ஆறதுக்கு முன்னால) அரை டம்ளர் அளவுக்கு எடுத்துக்கணும். இதுகூட ஒரு நெல்லிக்காய் அளவு பசு வெண்ணெய சேர்த்துக் கலந்து, ஆறினதும் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிச்சிட்டு வந்தா.. எந்தத் தொல்லையும் எப்பவும் இருக்காது.

மஞ்சகாமாலைக்குமட்டுமில்ல... மனநலக் கோளாறுக்கும்...!



தூக்கமின்மை சரியாக...

சிலபேரு தூக்கமில்லாம தவிச்சிக்கிட்டே இருப்பாங்க. ஜாதிக்காயை பொடி பண்ணி, தினமும் காலையில ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா... சும்மா கும்முனு சொக்கிக்கிட்டுத் தூக்கம் வரும்.

மனநலக் கோளாறு விலக...



கீழாநெல்லினதும் மஞ்சகாமாலைக்கு மருந்துனுதான் தோணும். ஆனா, மனநலக் கோளாறை சரி பண்ற சக்தியும் அதுக்கு இருக்குங்கறது ஆச்சர்யமான சேதிதான். கீழாநெல்லி சமூலத்தை (இலை, வேர், பூ, காய் என செடி முழுக்க) கல் உரல்ல போட்டு (ஒரு கைப்பிடி அளவு), தண்ணி விட்டு மை மாதிரி அரைக்கணும். தொடக்க நிலை மனநலக் கோளாறு உள்ளவங்களோட தலையில, காலை நேரத்துல இதைப் பூசணும். ரெண்டரை மணியில இருந்து மூணு மணி நேரம் கழிச்சு, தலைக்குக் குளிக்கணும். இப்படி பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை செஞ்சா நல்ல குணம் கிடைக்கும். மொத்தம் ரெண்டு, இல்லனா மூணு தடவை செய்தாலே போதும்.

இதேமாதிரி 'நல்லவேளை இலை'யை கல் உரல்ல போட்டு மையா அரைச்சு தலையில பூசி, ரெண்டரை மணியில இருந்து மூணு மணி நேரம் கழிச்சு தலைக்குக் குளிச்சு வந்தாலும் மனநலக் கோளாறு சரியாகும்.

நினைவாற்றல் பெருக...

திரிபலாவை (நெல்லிக்காய், தான் றிக்காய், கடுக்காய்) கால் ஸ்பூன் எடுத்து தேன்ல கலந்து தினமும் சாப்பிட்டு வந்தா நினைவாற்றல் பெருகும்.

இதேமாதிரி கோரைக்கிழங்கை பொடி பண்ணி, அரை ஸ்பூன் எடுத்து, அதோட தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெருகும்.

வல்லாரை இலைப்பொடியை கால் ஸ்பூன் அளவு காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் வரும்.
அமுக்கிராங்கிழங்கு சூரணம் ரெண்டு ஸ்பூன், பாதாம் பருப்பு நாலு, காய்ஞ்ச திராட்சை ஒரு ஸ்பூன் எடுத்து, 200 மில்லி பசும்பால்ல போட்டுக் காய்ச்சி, ஆறினதும் காலையிலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தா... நினைவாற்றல் அதிகரிக்கும்.

வல்லாரைத்தூள் 10 மடங்கு, வசம்புத்தூள் ஒரு மடங்கு சேர்த்து கலந்து வச்சிக்கிடணும். இதுல அரை ஸ்பூன் அளவு தேன்ல கலந்து காலை - மாலைனு சாப்பிட்டு வந்தா... நினைவாற்றல் கூடும்.

இதையெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும். தேவைப்பட்டா சில நாள் இடைவெளி விட்டுத் தொடரலாம்.

No comments:

Post a Comment

Popular Posts