அழகே... ஆரோக்கியமே.. (9)
பளபள தோலுக்கு பாதாம் வைத்தியம்!
நாற்பது வயதைக் கடக்கும் பெண்களுக்கு, 'மெனோபாஸ்' சமயத்தில் (மாதவிடாய் நிற்கும் போது) ஈஸ்ட்ரோஜன் சுரப்புக் குறைவதால், உடலில் பல மாற்றங்கள் நிகழும். உடலின் கொழுப்புச் சத்து குறைவதால், சருமத்தில் எண்ணெய் பசையே இல்லாமல் வறண்ட பாலைவனமாகிவிடும். மேலும், 'கொலஸ்ட்ரால் வருமோ' என்ற பயத்தில் உணவிலும் எண்ணெய் பதார்த்தங்களை அறவே ஒதுக்கிவிடுவதும் வறட்சிக்கு வழிவகுக்கும். இதனால், தோலில் சுருக்கம் அதிகமாகி, கூடுதலான வயோதிக தோற்றம் வந்து சேரும். இந்த வறட்சியினால் கண்கள், கன்னம், கை, கால், முழங்கைப் பகுதிகள் சுருங்கி, தோல் தொய்ந்துவிடும். உணவு மற்றும் சருமப் பராமரிப்பு மூலமும் சருமத்தை பளபளப்பாக மாற்ற முடியும்.
கும்மென்றிருந்த கன்னம், வயோதிகம் காரணமாக ரொம்பவே தளர்ந்து போகும். இதற்கு, தினமும் 4 பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து, ஒரு கப் பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம். இரவில் ஒரு கப் பாலில் அரை டீஸ்பூன் கசகசா தூளை கலந்து குடித்து வரலாம். மன நிம்மதியான உறக்கத்துடன் சருமமும் மிருதுவாக மாறும்.
கை, கால்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு, இளமையிலிருந்த அழகு, கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகும்போது... தலா 25 கிராம் கசகசா, வெள்ளரி விதையுடன் 10 கிராம் பாதாம்பருப்பை சேர்த்து அரையுங்கள். அந்த விழுதை, கால் கிலோ நல்லெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி இறக்குங்கள். இந்த எண்ணெயை உடம்பில் தினமும் தடவி வர, இழந்த பொலிவு மீண்டும் வந்து சேரும். தோலில் அரிப்பு இருந்தால், சிறிது விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
வைட்டமின் - ஈ குறைபாட்டினால் கண்களுக்கு கீழ் கருமை படரலாம். எண்ணெய் பசையில்லாமல் பொரி பொரியாக தோன்றி, கண் இமைகளுக்கு நடுவில் நிறைய சுருக்கங்கள் ஏற்படலாம். இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பியூட்டி பார்லரில் த்ரெட்டிங் செய்து கொள்வதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். இல்லையென்றால்... கண் அழகு மட்டுமல்ல, பார்வையும்கூட பாதிக்கப்படலாம்.
பனிக்காலத்தில் வறண்ட சருமம் மேலும் வறட்சிப் பாதையில் போய், உள்ளங்கையில் சொரசொரப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தினமும், இரவு தூங்கப்போகும்போது கை, கால்களை நன்றாக கழுவி விட்டு, ஸ்டாக்கிங் டைப் சாக்ஸ் அணிந்து கொள்வது தோலை மென்மையாக வைத்திருக்கும். பொரியல், கூட்டு, சாம்பார் உணவு வகைகளில் கசகசாவை சேர்த்துக் கொள்வதும் சருமத்தின் எண்ணெய் பசையை கூட்டும்.
50 கிராம் கசகசாவை வறுத்து, சம அளவு சர்க்கரை, பாதாம் 25 கிராம் சேர்த்து பொடியுங்கள். ஒரு கப் பாலில் இந்த பவுடரை ஒரு டீஸ்பூன் கலந்து குடித்துவர, ஒட்டுமொத்த சரும வறட்சியும் சட்டென மறையும்.
No comments:
Post a Comment