ப்ளஸ் டூ மாணவிகள் எல்லோரும் உற்சாகமாக முழு ஆண்டு தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்க, அரியலூரைச் சேர்ந்த ப்ளஸ் டூ மாணவி சுகப்ரியா, தன் வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். இதற்குக் காரணமாக... 'நோய், விழிப்பு உணர்வின்மை, விதி' என்று எதைச் சொல்வது?!
அரியலூரில் சலூன் கடை வைத்திருக்கும் கண்ணனுக்கு நான்கு மகள்கள். இரண்டாவது மகள்தான் சுகப்ரியா. இரண்டு மாதங்களுக்கு முன்புவரை தங்கைகளோடு ஓடி விளையாடிய வீட்டின் முற்றத்தில், இப்போது மரணத்தை நோக்கிய நாட்களை எண்ணியபடி படுக்க வைக்கப்பட்டிக்கிறாள் பாவமாக.
சுகப்ரியாவின் சோகத்துக்குக் காரணம்... மாதவிலக்குப் பிரச்னை. பொதுவாக பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஐந்து அல்லது ஏழு நாட்கள் வரை இருக்கும் உதிரப்போக்கு, சுகப்ரியாவுக்கு 12 நாட்களுக்கும் மேல் தொடர்ந்ததுதான் பிரச்னையின் ஆரம்பம்.
''சுகப்ரியா வயசுக்கு வந்து ரெண்டு வருசமாகுது. ஆரம்பத்துல இருந்தே அவளுக்கு அதிகமா உதிரப்போக்கு இருந்துச்சு. பயந்து போய் அரியலூர்ல இருக்கற ஏ.எஸ்.ஆஸ்பிட்டல்ல காட்டினோம். ஸ்கேன் எடுத்துப் பார்த்த டாக்டர், உடம்புல சத்து குறைவா இருக்கு; ரத்தம் ஊற ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு, மாசத்துக்கு 15 ஊசி போடணும்னு சொல்லி, மாத்திரையும் ஊசியும் எழுதிக் கொடுத்தாங்க. அடுத்த மாசமும் அவளுக்குப் பிரச்னை தொடர, மறுபடியும் டாக்டர்கிட்ட போனோம். 'இது உடனே சரியாகாது... தொடர்ந்து ஊசி போடணும்'னு டாக்டரம்மா சொன்னபடியே, 18 மாசம் தொடர்ந்து ஊசி போட்டுக்கிட்டு இருந்தோம். இடையில ஆறு மாசம் இவ தலைக்கு குளிக்கவே இல்லை. நல்லதுதான்னு அப்படியே விட்டுட்டோம்.
நவம்பர் மாசம் அரைப் பரீட்சை நேரத்துல தலைக்கு குளிச்சுட்டு பரீட்சைக்குப் போயிட்டு வந்தவ, படுத்த படுக்கையா ஆயிட்டா. கும்பகோணத்துல இருக்குற தனியார் ஆஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போனோம் ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு, பழைய மருந்து சீட்டை எல்லாம் பார்த்த டாக்டர், '18 மாசம் தொடர்ந்து ஒரே ஊசி போடலாமா? பிரியாவோட ரெண்டு கிட்னியும் வீணாகிடிச்சு'னு எங்களைத் திட்ட, உயிரே உறைஞ்சுடுச்சு.
இப்படி ஊசியைப் போட்டு அநியாயமா எம்பொண்ணை சிதைச்சுட்டீங்களே... அவளோட வாழ்க்கைக்கு என்ன பதில்னு போய் ஏ.எஸ். ஆஸ்பத்திரியில போய் கேட்டோம். ஆனா, எங்க மேலயே குத்தம் சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க.
அப்புறம் தஞ்சாவூர்ல இருக்கற பெரிய தனியார் ஆஸ்பிட்டலுக்கு அவங்களே அனுப்பி வைக்க, அங்க ஐ.சி.யூ-ல அஞ்சு நாள் வெச்சுருந்தாங்க. ஆனா, என் பொண்ணோட ஒவ்வொரு உறுப்பா செயலிழக்க ஆரம்பிச்சிடுச்சு. 'இனி, காப்பாத்த முடியாது'னு கையை விரிச்சுட்டாங்க. வேற வழியில்லாம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து வெச்சுக்கிட்டு, இவளைப் பார்த்து பார்த்து இப்போ நாங்க எல்லாம் உயிரோட செத்துக்கிட்டு இருக்கோம்''
- இப்படி பொங்கும் சுகப்ரியாவின் தாய் கலைச்செல்வியின் கண்ணீருக்கு காலத்திடம் பதில் இல்லை.
''என் புள்ளையா நெனச்சு சொல்றேன்... மாதவிலக்கு பிரச்னை இருந்தா அஜாக்கிரதையா இருந்துடாம ஒடனே ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயிடுங்க தாயிகளா..!'' என்று கை கூப்பினார் கலைச்செல்வி.
சம்பந்தபட்ட ஏ.எஸ். மருத்துவமனையின் டாக்டர் சுசிலாவிடம் இதைப் பற்றி கேட்டபோது, ''அந்தப் பெண்ணுக்கு ரத்தம் ஊறுவதற்காகத்தான் ஊசி போடச் சொன்னோம். ஆனால், அவர்கள் முறைப்படி வந்து, சரிவர ஊசி போட்டுக் கொள்ளவில்லை. நாலைந்து மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் இங்கு வரவே இல்லை. ஒரு சிகிச்சையை முறையாக பின்பற்றி, தொடர்ந்து அதை செய்து கொண்டால்தானே பலன் இருக்கும். அதை தவறவிட்டுவிட்டு, தற்போது எங்கள் மீது குறை சொன்னால், நாங்கள் என்ன செய்யமுடியும்?'' என்று தன் தரப்பைச் சொன்னார்.
மாதவிலக்குப் பிரச்னைகளில் போதுமான விழிப்பு உணர்வு அற்று இருந்ததே... சுகப்ரியாவின் இந்த நிலைக்குக் காரணமாகியிருக்கிறது. அந்த விழிப்பு உணர்வை ஊட்டும் வகையில் சில உண்மைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், நாகர்கோவிலைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் கிருஷ்ணா சுரேந்திரன்.
''பருவம் அடைந்த பெண்களுக்கு மாதவிலக்கு சீரான சுழற்சிக்கு வர 18 - 20 வயது வரை காத்திருக்கலாம். ஒரு சுழற்சிக்கு 24 - 28 நாட்கள் ஆகலாம். அதேபோல் ஏழு நாட்கள் வரை உதிரப்போக்கு இருப்பதும் இயல்புதான். ஆனால், 20 வயதுக்குப் பிறகும் சீரான சுழற்சியின்றி இருப்பது, உதிரப்போக்கு கட்டி கட்டியாக இருப்பது, ஏழு நாட்களுக்கும் மேலாக உதிரப்போக்கு இருப்பது போன்றவை எல்லாம், பிரச்னைக்குரிய காரணிகள்.
சுகப்ரியாவின் பிரச்னை, அதிக ரத்தப்போக்கு. இப்படித் தொடர்ந்து உதிரம் வெளியேறுவதால் உடலில் இரும்புச் சத்துக் குறைந்துவிடும் என்பதால், இப்பிரச்னை உள்ளவர்கள் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம். சுகப்ரியாவுக்கோ சத்துக்குறைவை ஈடுகட்ட அயர்ன் ஊசிபோட்டிருக்கிறார்கள். ஆனால், அது அளவுக்கு அதிகமாக தொடர்ந்ததால், கிட்னி பாதிப்படைந்திருக்கலாம். சிலருக்கு மிக அரிதாகப் பரம்பரைக் காரணங்களால் இயல்பிலேயே ரத்தம் உறையும் தன்மை குறைவாக இருக்கும். இதுவும் சுகப்ரியாவுக்கு நேர்ந்திருக்கலாம். அவரின் மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்தான் சுகப்ரியாவுக்கு நடந்தது என்ன என்பதை முழுமையாகச் சொல்லும்'' என்ற டாக்டர்,
''இந்தச் சம்பவம், பெண்களுக்கான எச்சரிக்கை. பொதுவாக மாதவிலக்குத் தொடர்பான சந்தேகங்கள், பிரச்னைகளை பெண்கள் வெளியில் யாரிடமும் பகிர்வது இல்லை என்பது, மாற்றிக்கொள்ள வேண்டிய நடைமுறை. குறைவான உதிரப்போக்கு, அதிகமான உதிரப்போக்கு, நீண்ட நாட்களுக்குத் தொடரும் உதிரப்போக்கு, கட்டியான உதிரப்போக்கு, சீரான சுழற்சியின்மை என்று எந்தப் பிரச்னையானாலும் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி, பிரச்னைக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, முறையான சிகிச்சை எடுக்க வேண்டும். மாறாக பிரச்னையை மறைத்து வைத்துக்கொள்வது, ரத்த சோகை, கூந்தல் இழப்பு, உடல் எடை கூடுவது, குறைவது முதல் உள்ளுறுப்புகள் செயல்பாட்டுக் கோளாறுகள் வரை அதை இன்னும் தீவிரப்படுத்தவே செய்யும்'' என்று எச்சரித்து முடித்தார் டாக்டர்.
No comments:
Post a Comment