பளபளக்கும் பட்டுக் கூந்தலுக்கு..
இயற்கை தரும் இளமை வரம்!
உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல.. அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் ஆரஞ்சுப் பழம் நமக்கொரு ஆச்சர்ய வரம்தான். வாருங்களேன்.. அந்த ஆச்சர்யத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
எண்ணெய்ப் பசை சருமம், அதனால் வரும் பருக்களால் அவதிப்படுகிறீர்களா? கவலையை துடைத்தெறியுங்கள்.
ஆரஞ்சுப் பழத்தின் தோலை காய வைத்துப் பொடித்த பவுடர் - 2 டீஸ்பூன், இத்துடன் ஒரு டீஸ்பூன் பாலை கலந்து முகத்துக்கு 'பேக்' ஆகப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை எட்டுக் கால் பாய்ச்சலில் ஓடியே போய்விடும்.
பருக்களை விரட்ட இன்னொரு வைத்தியமும் உண்டு ஆரஞ்சில்!
ஒரு டீஸ்பூன் கடலை மாவு, கால் டீஸ்பூன் வேப்பிலை பவுடர், ஆரஞ்சுப் பழத்தின் ஒரு சுளை.. இவற்றை கைகளால் நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை, வாரம் இருமுறை முகத்தில் பூசி கழுவுங்கள். பருக்களின் வீரியம் குறையும். புதிதாகப் பருக்கள் ஏற்படாமலும் தடுக்கும்.
பருவால் ஏற்பட்ட தழும்பைப் போக்க அருமையான சிகிச்சை இருக்கிறது.
ஒரு ஆரஞ்சுப் பழத்தின் பாதியளவு தோலை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும், அதில் வெட்டிப் போட்ட தோல் துண்டுகளில் இரண்டை எடுத்து, அதனுடன் 2 டீஸ்பூன் முல்தானிமெட்டி பவுடர், புதினா இலை 5 சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்துக்கு 'பேக்' ஆகப் போட்டுக் கழுவுங்கள்.
வாரம் ஒருமுறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து, சருமம் மிருதுவாகும்.
கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் கறுப்பு கறுப்பாக திட்டுகள் படிந்திருக்கிறதா?
2 பாதாம் பருப்புகளுடன், 2 டீஸ்பூன் பால், ஒரு ஆரஞ்சுச் சுளையின் சாறு, அரை மூடி எலுமிச்சம் பழச் சாறு கலந்து அரையுங்கள். இதைக் கருமை படர்ந்த இடத்தில் பூசி, ஐந்து நிமிடம் கழித்து கழுவுங்கள். கருமை காணாமல் போகும்.
வியர்வையை விரட்டும் மகிமையும் ஆரஞ்சுக்கு இருக்கிறது.
உலர்ந்த ஆரஞ்சு பழத் தோல் - 100 கிராம், மைசூர் பருப்பு - 200 கிராம்.. இந்த இரண்டையும் மிஷினில் கொடுத்து, மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை வாரம் இருமுறை உடலில் தேய்த்துக் குளித்தால், வியர்வை நாற்றம் உங்களை விட்டு ஓடிப் போகும்.
விளம்பரங்களில் வருவது போன்ற பட்டுக் கூந்தலை உங்கள் பொக்கிஷமாக்கிக் கொள்ளுங்கள் ஆரஞ்சின் உதவியுடன்!
ஆரஞ்சு பழத் தோலை உலர்த்தி அரைத்த பவுடர் - 100 கிராம், கடலைப்பருப்பு - அரை கிலோ, கொட்டை நீக்கிய பூந்திக் கொட்டை - 100 கிராம்.. இந்த மூன்றையும் மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலச.. பளபளக்கும் உங்கள் கூந்தல். இந்தப் பொடியை வீட்டில் அரைத்த சீயக்காய் பொடியுடன் கலந்து தேய்த்தும் குளிக்கலாம்.
ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆரஞ்சு!
''ஆரஞ்சு பழத்திலும் சாத்துக்குடியிலும் ஏ, பி, சி வைட்டமின் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றின் பலன்களை பார்க்கலாம்..
தாய்ப்பால் கிடைக்காத 3 மாதக் குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் ஆரஞ்சு/சாத்துக்குடி ஜூசுடன், ஒரு ஸ்பூன் தண்ணீர் கலந்து கொடுக்கலாம். தாய்ப்பால் இழப்பை ஓரளவுக்கேனும் ஈடுகட்டும் பானம் இது.
தினமும் தூங்கப் போகும் முன் 100 மில்லி ஜூசுடன், 2 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர, நல்ல தூக்கம் கண்களைத் தழுவும்.
சர்க்கரை நோயாளிகள் ஜூஸில் சர்க்கரை சேர்க்காமல் பருகலாம்.
தினமும் ஒரு ஆரஞ்சு/சாத்துக்குடி சாப்பிடுவதால் பித்தக் கோளாறு குணமாகும்.
ரத்த விருத்திக்கும் அறிவாற்றலை பெருக்கவும் இதன் ஜூஸ் உதவுகிறது.
நெடுந்தூர பயணத்துக்கு கையோடு ஒரு ஆரஞ்சு /சாத்துக்குடியை எடுத்துச் சென்றால் வாந்தி, குமட்டலிலிருந்து விடுபடலாம்.
வீட்டில் எறும்புத் தொல்லை அதிகமாக இருந்தால்.. இதன் தோலை வெட்டிப் போடுங்கள். அந்த வாசனைக்கே எறும்பு எட்டியும் பார்க்காது.''
No comments:
Post a Comment