எப்போதோ படித்த நகைச்சுவை."எங்கப்பாவுக்கு முடி வெட்ட நூறு ரூபா வாங்கினாங்கடா!" " ஆமாம் ,ஒவ்வொரு முடியா தேடி வெட்டுறது கஷடமில்லையா? முடி கொட்டுவது அதிகரித்துவிட்டது என்பதை தோல் சிகிச்சை நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.முடி வெட்டுபவர் ஒருவர் சொன்னார்,''தலையில முடியே இருக்கமாட்டேங்குது சார்,கையில புடிச்சா நாலுமுடிதான் கிடைக்குது''. ஆனால் இது வழுக்கைத்தலை இல்லை.
வழுக்கை என்பது பெரும்பாலும் பரம்பரையாக வரும் விஷயம்.முடியின் அடர்த்தி குறைந்து வருவதற்கான காரணங்களில் இன்றைய வாழ்க்கைமுறைக்கு பங்கு அதிகம்.தினமும் குறிப்பிட்ட அளவு முடி கொட்டி வளர்ந்து கொண்டிருப்பது அதன் இயல்பு.ஆனால் விளம்பரங்களில் வருவது போன்று சிலருக்கு சீப்பு முழுக்க ஒட்டிக்கொண்டு வரும்.முதல் காரணமாக மன நலத்தைச் சொல்லலாம்.
இன்று அதிகரித்து வரும் மன அழுத்தம் உடல் நலத்தை சிதைத்து வருகிறது.உடல் நலமும் மன நலமும் கெட்டால் தோலை அதிகம் பாதிப்பதால் முடி கொட்டுகிறது.அன்றாடம் நேரும் மனதுக்கு பிடிக்காத சூழ்நிலைகள் மனதிலும்,உடலிலும் பெரும் தாக்குதலை தொடுக்கிறது.ஹார்மோன்களில் பெரும் மாறுபாட்டை கொண்டு வருகிறது.ஏதேதோ நெருக்கடிகளால் சரியாகத் தூங்க முடியாத இரவுகளுக்கு அடுத்த நாள்களில் அதிகம் முடி கொட்டுவதை நீங்கள் பார்க்க முடியும்.
அடுத்ததாக அவரவர் முடிக்கு ஏற்ப ஷாம்புகளை உபயோகிப்பது.மருத்துவர் பரிந்துரையாக இருந்தால் நல்லது.அடிக்கடி ஷாம்புவை மாற்றுவதும்,நாம் பயன்படுத்துவது அப்போதைக்கு இல்லாவிட்டால் ஏதோவொன்றை வாங்கி பயன்படுத்துவதும் முடியின் ஆரோக்கியத்தை கெடுக்கும்.பொடுகுத்தொல்லை அதிகம் இருந்தாலும் முடி உதிரும்.இவற்றைப் போக்க நல்ல மருந்துகள் இருக்கின்றன.சில மருந்துகளும் முடியை பாதிக்கும்.
ஹார்மோன் கோளாறுகள் உள்ளவர்களுக்கு முடி கொட்டுவது இயல்பு.இதெல்லாம் மருத்துவக் காரணங்கள்.நம்முடைய தவறுகளால் முடியை இழப்பது என்பது போதுமான வைட்டமின்கள்,தாதுக்கள்,புரதங்கள் சேர்க்காத நிலையில் ஏற்படும்.உயிர்ச்சத்து அதிகமுடைய பழங்கள்,காய்கறிகளை சேர்ப்பது,போதுமான அளவு நீர் அருந்துவது,எட்டுமணி நேர தூக்கம் போன்றவை முடிக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை காக்கும்.
இரும்புச்சத்து பற்றாக்குறை முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.பேரீச்சம்பழம்,அசைவ உணவுகள்,வெல்லம்,முருங்கைக்கீரை போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது.
இச்சத்து உடலில் சேர உணவு உண்ட ஒருமணி நேரத்திற்காவது காபி,தேநீர் தவிர்க்கலாம்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு போன்ற சி வைட்டமின் கொண்டவை இரும்புச்சத்து உடலில் கிரகிக்க அவசியம்.
No comments:
Post a Comment