சென்னை: மழைக் காலங்களில் சாலைகளில் தேங்கி நிற்கும் நீர் மூலம் லெப்டோ ஸ்பைரோசிஸ் என்ற எலிக் காய்ச்சல் நோய் வரலாம் என்று பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக் காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்ட் போன்ற நோய்கள் வராமல் தடுக்க, குடிநீரை வடிகட்டி, நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின்னர் குடிக்க வேண்டும்.
பாக்கெட் குடிநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். மினரல் வாட்டரை அதன் தரம் அறிந்து பருக வேண்டும். உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறைகளை பயன்படுத்திய பின்பும் கைகளை சோப்பினால் நன்கு கழுவ வேண்டும்.
மழை நீரை வீட்டின் மேல் தளங்கள், பூந்தொட்டிகள், உபயோகமற்ற டயர்கள், மற்றும் பொருட்களில் தேங்க விடக்கூடாது. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு காய்ச்சல் நோய்கள் பரவலாம். எனவே உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.
சாலைகளில் தேங்கி நிற்கும் நீரில் நடந்தால் கால்களை நன்றாகக் கழுவ வேண்டும். அந்த நீர் மூலம் லெப்டோ ஸ்பைரோசிஸ் என்ற எலிக் காய்ச்சல் நோய் உருவாகலாம்.
மேலும், சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கியிருக்கும் நீரை அடித்து எடுத்து பருகக்கூடாது. குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தாலோ அல்லது அடைப்புகள் ஏற்பட்டு தேங்கி நின்றாலோ உடனடியாக புகார் செய்யவும்.
சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை உண்ண வேண்டாம். உணவுப் பொருட்களை சமைத்தவுடன் சூடான நிலையிலேயே உண்ண வேண்டும்.
திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, பொது கழிப்பிடங்கள் அல்லது வீடுகளில் உள்ள கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டும். உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை குப்பைத் தொட்டியில் மட்டுமே போட வேண்டும்.
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும். உடனே அருகிலுள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தொற்றுநோய் மருத்துவமனையில் காலம் தாழ்த்தாமல் சிகிச்சையை பெற வேண்டும்.
இது சம்பந்தமாக பொதுமக்கள் புகார் தரவும், அவசர உதவி மற்றும் சிகிச்சைக்கு தொலைபேசி எண்கள் 1913, 25912686, 25912687 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment